மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள டி.இடையபட்டி நெல்லிக்குளம் வடகரையில் நெல்லியம்மன் கோவில் திருவிழா கடந்த 30-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் அருகில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களின் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குட விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டி.இடையப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பக்தி பரவசத்துடன் தாரை தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்து பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து நெல்லியம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) பொங்கல் வைத்தும், நாளை (புதன்கிழமை) பாரிவேட்டை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.