நெல்லை பல்கலைக்கழகத்தில் 18-ந்தேதி பட்டமளிப்பு விழா; கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

Update: 2023-07-14 18:45 GMT

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

பட்டமளிப்பு விழா

இதுகுறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி அளவில் பல்கலைக்கழக வ.உ.சிதம்பரனார் கலையரங்கத்தில் நடக்கிறது. விழாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

விழாவில் மொத்தம் 43 ஆயிரத்து 861 மாணவர்கள் பட்டங்கள் பெறுகின்றனர். இதில் 105 பேருக்கு தங்கப்பதக்கங்கள், 948 பேருக்கு முனைவர் பட்டங்கள் என மொத்தம் 1,053 பேருக்கு கவர்னர் நேரடியாக பட்டங்களை வழங்குகிறார்.

தங்கப்பதக்கம்

முதுகலை பட்டதாரிகள் 5,560 பேரும், இளநிலை பட்டதாரிகள் 24 ஆயிரத்து 363 பேரும், எம்.பில். பட்டதாரிகள் 221 பேரும், தன்னாட்சி கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பயின்ற மாணவர்கள் 8,956 பேரும், தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம் மூலம் பயின்ற 3,813 பேரும் பட்டங்கள் பெறுகின்றனர்.

காயல்பட்டினம் வாவு வஜீஹா பெண்கள் கல்லூரி மாணவி முகம்மது நூர் அஸ்மா அரபி மற்றும் ஆங்கில பாடங்களில் முதலிடம் பிடித்து 2 தங்கப்பதக்கங்களை பெறுகிறார். திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா சஹாரா பி.ஏ. பொருளாதார பாடத்தில் முதலிடம் பிடித்து டாக்டர் சிவந்தி ஆதித்தனார் தங்கப்பதக்கம் மற்றும் டாக்டர் ராமச்சந்திரன் தங்கப்பதக்கம் ஆகிய 2 பதக்கங்களை பெறுகிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வாழ்த்தி பேசுகிறார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் பிபேக் டெப்ராய், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்