நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்-குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
நெல்லை மாவட்டத்தில் மழையின்றி குளங்கள் வறண்டு கிடப்பதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.;
நெல்லை மாவட்டத்தில் மழையின்றி குளங்கள் வறண்டு கிடப்பதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
மழை குறைவு
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் ஆண்டுக்கு இயல்பான மழை அளவு 815 மில்லி மீட்டர் ஆகும். ஜனவரி மாதம் மட்டும் 50 மில்லி மீட்டர் மழை இயல்பாக பெய்யும். ஆனால் இந்த ஜனவரி மாதம் 16.8 மில்லி மீட்டர் மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழையை விட 67 சதவீதம் குறைவு ஆகும்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் கடந்த ஆண்டு இதே நாளில் 80.25 சதவீதம் நீர்இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 39.90 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 265 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு ஆய்வு நடத்தி தரமற்ற விதை விற்பனை செய்த 36 பேர் மீது துறை ரீதியாகவும், 2 பேர் மீது கோர்ட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தரம் குறைந்த ரூ.77 லட்சம் மதிப்புள்ள 57 டன் விதைகளை விற்க தடை விதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
வறட்சி மாவட்டம்
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். தாஸ் என்பவர் பேசுகையில், "நெல்லை மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில் 730 குளங்கள் வறண்டு கிடக்கின்றன. மற்ற குளங்களில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளன. குறிப்பாக மானூர், நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை பகுதிகளில் வறட்சி காணப்படுகிறது. எனவே நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க தமிழக அரசுக்கு கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும்'' என்றார்.
பெரும்படையார் பேசுகையில், "தாமிரபரணி பாசனம் மற்றும் மலை அடிவார பகுதிகளை தவிர மாவட்டத்தில் பெரும்பகுதி மழை பெய்யாமல் வறண்டு கிடக்கிறது. மாவட்டத்தில் பெரிய குளமான வடக்கு விஜயநாராயணம் குளம், மானூர் பெரியகுளம் உள்ளிட்டவை தண்ணீர் இன்றி கிடக்கிறது. எனவே வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். இந்த கோரிக்கைக்கு அனைத்து விவசாயிகளும் ஆதரவு அளித்தனர்.
ஆய்வு செய்யப்படும்
பின்னர் விவசாயிகள் கேள்விக்கு கலெக்டர் விஷ்ணு பதில் அளிக்கையில், "விவசாயிகளின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும். வறட்சி என்பது 3 வகையாக பார்க்கப்படும். இதுதொடர்பாக ஆய்வுக்கு பிறகு அரசுக்கு உரிய பரிந்துரை செய்யப்படும்'' என்றார்.
இதே போல் விவசாயிகள் தங்களது பகுதிக்கான கோரிக்கைளை முன்வைத்து பேசினர்.
கூட்டத்தில், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பையா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.