நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயிலுக்கு கடையநல்லூரில் நிறுத்தம்
நெல்லை -மேட்டுப்பாளையம் ரெயில் கடையநல்லூரில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.;
தென்காசி:
நெல்லையில் இருந்து சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக கோவை மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நெல்லை, தென்காசி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ரெயில் தென்காசியை கடந்து கடையநல்லூா், சங்கரன்கோவிலில் நிற்காமல் ராஜபாளையத்தில் மட்டுமே நின்று சென்றது. இதனால் சங்கரன்கோவில், கடையநல்லூர் ரெயில் நிலையங்களிலும் இந்த ரெயில் நின்று செல்ல வேண்டும் என்று அந்த பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்த ரெயில் சங்கரன்கோவிலில் நின்று செல்கிறது.
இந்த நிலையில் தற்போது கடையநல்லூரிலும் இந்த ரெயில் நின்று செல்லும் என்று சென்னை தெற்கு ரெயில்வே போக்குவரத்து பிரிவு தலைமையகம் அறிவித்து உள்ளது. அதாவது நெல்லையில் இருந்து வருகிற 9-ந் தேதி புறப்படும் ரெயில் கடையநல்லூரில் இரவு 8.54 மணிக்கு வந்து 2 நிமிடங்கள் நின்று மீண்டும் 8.56 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு கடையநல்லூரில் அதிகாலை 4.40 மணிக்கு வந்து 2 நிமிடங்கள் நின்று, மீண்டும் 4.42 மணிக்கு புறப்பட்டு நெல்லை நோக்கி வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.