நெல்லை கலெக்டர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
நெல்லை அருகே அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை அருகே சுத்தமல்லி பகுதியில் 84 வயது மூதாட்டி ஒருவர் கடந்த 29-ந் தேதி வயது மூப்பு காரமாக இறந்தார். இதையடுத்து அவருடைய உடலை உறவினர்கள் அந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் கடந்த 30-ந் தேதி அடக்கம் செய்தனர். அந்த மூதாட்டியின் உடல், பொது பாதையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறி அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் வெளியே எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், போலீசார் ஆகியோர் அந்த சுடுகாட்டுக்கு சென்று அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீஹா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "கோர்ட்டு உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளனர்.