நெகிழி இல்லா நெல்லை திட்டம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்

நெகிழி இல்லா நெல்லை திட்டத்தை கலெக்டர் கார்த்திகேயன் நேற்று தொடங்கி வைத்தார்.;

Update: 2023-05-11 20:51 GMT

நெல்லை மாநகராட்சியின் நெகிழி இல்லா நெல்லை திட்ட தொடக்க நிகழ்ச்சி பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நெகிழி இல்லா நெல்லை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வந்து மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்கிய பொதுமக்களுக்கு ஊக்கத்தொகையாக ஒரு ரூபாய் வழங்கி அதற்கான ரசீதையும் கொடுத்தார்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறும் போது, 'முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் நெல்லை மாநகராட்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகராட்சியில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களை பொது இடத்தில் வாங்கப்பட்டு வந்தது. தற்போது மக்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் நேரடியாக பிளாஸ்டிக் பாட்டில்கள் பெறப்படுகிறது. இந்த ஆண்டு பொதுமக்களிடம் இருந்து நேரடியாக 10 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மாநகர பகுதிகளில் 15 இடங்களில் பாட்டில்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மாநகராட்சி ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். அவர்களிடம் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் பாட்டில்கள் அனைத்தும் சேமித்து வைக்கப்பட்டு இறுதியாக்கம் செய்வதற்காக சாலைகள் அமைப்பதற்கும், சிமெண்டு ஆலைக்கு எரிபொருளாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், ெரயில் நிலையத்திலும் மக்களிடம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பெற மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் காளிமுத்து, மாநகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் அந்தோணி, சங்கரலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்