நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம்:குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

Update: 2023-09-22 18:45 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-

ஏத்தக்கோவில் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 2 ஆண்டாக மனு கொடுத்தும் பதில் கூட கிடைப்பது இல்லை. ஐகோர்ட்டு உத்தரவிட்ட போதிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது இல்லை. எனவே அந்த கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும்.

சண்முகாநதி வாய்க்கால் ரூ.6 கோடியே 74 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வாய்க்காலின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. 2 ஊராட்சிகளின் கழிவுகள் இந்த வாய்க்காலில் தான் கொட்டப்படுகின்றன. அதை தடுக்க வேண்டும். மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர்.

சீமைக்கருவேல மரங்கள்

கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்கள் அதிகரித்துள்ளன. அவற்றை அகற்றும் பணியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும். பாலகிருஷ்ணாபுரம் கண்மாயில் முள்மரங்களை அகற்ற வேண்டும் என்று 10 ஆண்டுகளாக விவசாயிகள் கூறி வருகின்றனர். ஆனால், வனத்துறையினர் வெட்டுவது இல்லை. இதனால் கண்மாயில் போதிய அளவில் நீர் தேக்கி வைக்க முடியவில்லை. அனுமதி கொடுத்தால் விவசாயிகளே மரங்களை வேரோடு பிடுங்கி ஓரிடத்தில் குவித்து வைத்து விடுகிறோம். அதை வனத்துறையினர் வெட்டி ஏலம் விடட்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், வேளாண்மை இணை இயக்குனர் சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்