4 ஆயிரத்து 147 பேர் இன்று 'நீட்' தேர்வு எழுதுகிறார்கள்

Update: 2023-05-06 15:47 GMT


மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 'நீட்' தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி பெருமாநல்லூர் கே.எம்.சி. பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 552 பேரும், திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. கலை அறிவியல் கல்லூரியில் 912 பேரும், சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளியில் 672 பேரும், திருப்பூர் ஜெயந்தி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 632 பேரும், திருப்பூர் காங்கயம் ரோடு அபாகஸ் மாண்டிசோரி இன்டர்நேஷனல் பள்ளியில் 167 பேரும், கூலிபாளையம் நால்ரோடு வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் 900 பேரும், திருப்பூர் ஏ.கே.ஆர். அகாடமி பள்ளியில் 312 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 147 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள் 'நீட்' நுழைவுச்சீட்டு, அடையாள சான்று தவிர வேறு எந்த ஆவணங்களும் அறைக்குள் அனுமதிக்கப்படாது. தேர்வர்களுக்கு பால்பாயிண்ட் பேனா தேர்வு அறையில் வழங்கப்படும். தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வு அறைக்கு 1.15 மணி முதல் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 1.30 மணிக்கு பிறகு மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக் கப்பட மாட்டார்கள்.

அதன்பிறகு 1.30 மணி முதல் 1.45 மணி வரை முக்கியமான அறிவுறுத்தல்கள் அறிவிப்புகள் மற்றும் நுழைவுசீட்டு சரிபார்த்தல் நடக்கும். 1.45 மணிக்கு வினாத்தாள் வினியோகம் செய்யப்படும். 1.50 மணிக்கு தேர்வர்கள் வினாத்தாளில் விவரங்களை எழுத வேண்டும். 5.20 மணி வரை தேர்வு நடக்கிறது. தேர்வு மையங்களில் பெற்றோர் அமருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்