அரசு பள்ளிகளை சேர்ந்த 263 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 263 மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.;

Update: 2022-09-10 17:48 GMT

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 263 மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 107 அரசு மேல்நிலைபள்ளிகளை சேர்ந்த 1,468 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தி வந்தனர். இவர்களில் 1,267 பேர் நீட் தேர்வை எழுதினார்கள். தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிஉள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவ- மாணவிகளில் 263 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். பண்டஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விஷ்ணுகுமார் 376 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கலப்பம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் கவின் 369 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், பி.அக்ரகாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சரண் 363 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும்பிடித்துள்ளனர்.

தேர்ச்சி அதிகரிப்பு

தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி தர்மபுரி மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 67 மாணவ-மாணவிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான சேர்க்கை கிடைக்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 262 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 36 பேர் தேர்ச்சி பெற்றனர். நடப்பாண்டில் 263 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நீட் தேர்வில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்