''தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்''- மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
சென்னை மழை வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
சென்னை,
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். ராஜ்நாத் சிங்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது புயல் வெள்ள பாதிப்பு சேத விவரங்கள் குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் முதல்-அமைச்சர் எடுத்துரைத்தார். அதன்பின்னர் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு, மிக்ஜம் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும், அதை எதிர்கொண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் பற்றியும் தலைமைச் செயலகத்தில் வீடியோ படக்காட்சி காட்டப்பட்டது.
இதன் பின்னர் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது;
"சென்னையில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஹெலிகாப்டரில் சென்று ஆய்வுசெய்தேன். இதை தொடர்ந்து, தமிழக முதல் அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன்.
நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். இங்குள்ள சூழ்நிலையை மேம்படுத்துவோம் என்று நம்புகிறேன். தமிழக மக்களின் நலனுக்காக இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் சார்பில் உறுதியளிக்கிறேன்.
தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு 2வது தவணையாக ரூ.450 கோடியை உள்துறை அமைச்சகம் வழங்க உள்ளது. ஏற்கெனவே முதல் கட்டமாக ரூ.450 கோடி வழங்கப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் சென்னை மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக மத்திய நிவாரண நிதி ரூ.500 கோடியை வழங்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.