விழுப்புரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
விழுப்புரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.;
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 33) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சந்தோஷ் கடந்த 7-ந்தேதி விழுப்புரத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கக்கனூர் நோக்கி வந்த போது எதிரே வந்த லாரி மோதி பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் சந்தோஷ் சுயநினைவின்றி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையின்போது மூளைச்சாவு அடைந்தாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்தோஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் குந்தவி தேவி தலைமையிலான மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் சந்தோஷின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகம், 2 நுரையீரல், 2 கருவிழிகள் ஆகிய உறுப்புகளை அகற்றினர். பின்னர் அந்த உறுப்புகள் சென்னை, திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு 8 பேருக்கு மறு வாழ்வு அளிக்கப்பட்டது. இதற்கிடையே சந்தோஷின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் சந்தோஷின் மனைவி புவனேஷ்வரியிடம் உடல் உறுப்பு தான சான்றிதழை வழங்கினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று தான் முதன்முறையாக உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்த கல்லூரி முதல்வர் குந்தவிதேவி, மருத்துவ கண்காணிப்பாளர் செந்தில்குமார், நிலைய மருத்துவ கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் டாக்டர்களை கலெக்டர் மோகன் பாராட்டினார்.