வாழப்பாடி அருகே, காணும் பொங்கல் பண்டிகையில் பேய் விரட்டும் வினோத திருவிழாகாட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம் முறத்தடி வாங்கிய பெண்கள்
வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில், காணும் பொங்கல் பண்டிகை நாளில், பேய் விரட்டும் வினோத திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் காட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம் முறத்தடி வாங்கி பேய் விரட்டும் வழிபாட்டில் பங்கேற்றனர்.;
வாழப்பாடி,
வினோத நிகழ்வுகள்
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் பொங்கல் பண்டிகை தருணத்தில் எருதாட்டம், மஞ்சுவிரட்டு மற்றும் பானை உடைத்தல், வழுக்கு மரமேறுதல், கபடி போட்டி உள்ளிட்ட பாரம்பரியத்தை பறைசாற்றும் விளையாட்டுகள் மட்டுமின்றி, நரியாட்டம் எனப்படும் வங்காநரி பொங்கல் போன்ற வினோத நிகழ்வுகளும் நடந்து வருகிறது.
வித்தியாசமான திருவிழாக்கள், வியப்பூட்டும் வழிபாட்டு முறைகளுக்கு பெயர் பெற்ற வாழப்பாடி பகுதியில் உள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில், இந்த அதிநவீன காலத்திலும் காணும் பொங்கல் பண்டிகை நாளில் நடந்தேறி வரும் பேய் விரட்டும் திருவிழா குறிப்பிடத்தக்கதாகும்.
பேய் விரட்டும் திருவிழா
பொன்னாரம்பட்டி கிராமத்தில் காணும் பொங்கல் பண்டிகை நாளில், பேய் விரட்டும் திருவிழா நடத்துவதற்காகவே பரம்பரை உரிமை கொண்ட பூசாரி குடும்பத்தினர், பொங்கல் பண்டிகை தொடங்குவதற்கு முன்பே, அசைவ உணவுகளை சாப்பிடாமலும், காலணிகள் அணியாமலும் விரதம் இருக்கின்றனர்.
காணும் பொங்கல் தினத்தன்று பேய் விரட்டுவதற்காக முன்னோர்கள் வடிவமைத்து கொடுத்த கருப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு காட்டேரி வேடம் பூண்டு மேள வாத்தியம் முழங்க, பூசாரிகள் ஆற்றங்கரைக்கு செல்வார்கள். அங்கு கூடியிருக்கும் பெண்களை அழைத்து தலைமுடியை கையில் பிடித்து கொண்டு மூங்கிலால் முடையப்பட்ட முறத்தால் தலையில் 3 முறை அடிப்பார்கள். பிறகு நெற்றியில் விபூதி வைத்து அனுப்பி விடுவார்கள்.
விரதமிருந்து சிறப்பு பூஜை வழிபாடு நடத்திய பிறகு பேய் விரட்டும் காட்டேரி வேடமிட்ட இந்த பூசாரிகளிடம் முறத்தடி வாங்கினால், திருமணம் விரைவாக கைகூடி நல்ல வரனும், குழந்தை பாக்கியம் கிடைக்குமென நம்பிக்கை தொடர்ந்து வருகிறது.
பெண்கள் வரிசையில்...
காணும் பொங்கல் தினமான நேற்று நடைபெற்ற இந்த வினோத விழாவில், ஏராளமான பெண்கள் தானாக முன்வந்து வரிசையில் நின்று காத்திருந்து, பூசாரியிடம் முறத்தடி வாங்கி கொண்டனர். தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில் காணும் பொங்கல் தோறும் தவறாமல் நடந்து வரும் இந்த பேய் விரட்டும் திருவிழாவை காணவும், பேய் விரட்டி கொள்ளவும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் கூடியிருந்தனர்.
இதுகுறித்து பொன்னாரம்பட்டியைச் சேர்ந்த பெண்கள் சிலர் கூறியதாவது:-
எங்களது கிராமத்தில் ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று பேய் விரட்டும் விழா தொடர்ந்து நடந்து வருகிறது. விரதமிருந்து சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யும் பூசாரிகள் முறத்தால் அடிப்பதால், அடி வாங்கும் பெண்களுக்குள் இருந்த குழப்பமான எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, புத்துணர்வும் தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி, திருமணம் கைகூடி, நல்ல வரனும், குழந்தை பாக்கியமும் கிடைக்குமென்ற நம்பிக்கையும் தொடர்ந்து வருகிறது. இதனால் வெளியூரில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்களும், காணும் பொங்கலன்று சொந்த கிராமத்திற்கு வந்து பூசாரிகளிடம் சென்று பேய் விரட்டி கொள்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.