தூத்துக்குடி அருகேராணுவ வீரர் வீட்டில் ரூ.2 லட்சம் நகை, பணம் கொள்ளை
தூத்துக்குடி அருகே ராணுவ வீரர் வீட்டில் ரூ.2 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி அருகே ராணுவ வீரர் வீட்டில் ரூ.2 லட்சம் நகை, பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராணுவ வீரர்
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் ரதீஷ். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 26). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு பேய்க்குளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாா். மீண்டும் அவர் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கிரில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகப்பிரியா வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
நகை, பணம் கொள்ளை
அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 5½ பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. கொள்ளைபோன நகைகள், பணத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
சண்முகப்பிரியா பெற்றோர் வீட்டுக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.