தூத்துக்குடி அருகே வியாபாரி வீட்டின் கதவை உடைத்து ரூ.3½ லட்சம் பணம், நகைகள் திருட்டு
தூத்துக்குடி அருகே வியாபாரி வீட்டின் கதவை உடைத்து ரூ.3½ லட்சம் பணம், நகைகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து ரூ.3½லட்சம் பணம் மற்றும் நகைகளை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாபாரி
முத்தையாபுரம் அருகே உள்ள குமாரசாமி நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். வியாபாரி. இவரது மனைவி பவிதா (வயது 45). இவர்கள் வீட்டின் முன்பு கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடராஜனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதமாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அரசு ஆஸ்பத்திரி அருகில் பவிதாவின் தாயார் வீடு இருக்கிறது. இதனால் வீட்டை பூட்டிவிட்டு பபிதா தாயார் வீட்டில் இருந்தவாறு கணவரை கவனித்து வந்தார். மேலும், முத்தையாபுரம் குமாரசாமி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அவ்வப்போது வந்து சென்றுள்ளார்.
வீடுபுகுந்து திருட்டு
இந்த நிலையில் நேற்று முன்தினம் பவிதாவின் வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதை பார்த்த அவரது வீட்டின் பின்புறம் வசித்து வந்த மணிகண்டன் என்பவர் நடராஜன் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில், பவிதா வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.3½ லட்சம் பணம் மற்றும் 12 கிராம் தங்கம், 715 கிராம் வெள்ளி பொருட்கள், வீட்டில் இருந்த பல்வேறு பொருட்களும் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியதும் தெரிய வந்துள்ளது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து பவிதா முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்து செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.