தேவாரம் அருகே நிலத்தை உழுதபோது அம்மன் சிலை கண்டெடுப்பு
தேவாரம் அருகே நிலத்தை உழுதபோது அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது;
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தே.மீனாட்சிபுரம் சாக்குலூத்து மெட்டு அடிவார பகுதியை சேர்ந்தவர் கோபால். இவருக்கு, அந்த பகுதியில் மானாவாரி நிலம் உள்ளது. அந்த நிலத்தில், நிலக்கடலை விதைப்பதற்காக டிராக்டரில் உழவு பணி நடந்தது. அப்போது உழவு எந்திரத்தில், கல் ஒன்று மோதியது போல் சத்தம் கேட்டது. இதையடுத்து டிராக்டரை நிறுத்தி விட்டு அந்த இடத்தில் தோண்டினர். அப்போது, அதில் 4 செ.மீ. உயர ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தே.மீனாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ரெங்கசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர் சிலையை கைப்பற்றினார். பின்னர் அந்த சிலை, உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜூன், துணை தாசில்தார் கண்ணன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலை எப்படி அங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. நிலத்தில் உழவு செய்தபோது, ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.