தேனி அருகேகோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

தேனி அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-14 18:45 GMT

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அன்னஞ்சி கிராமத்தில் பட்டாளம்மன் கோவில் உள்ளது. மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இந்த ஊரில் நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, இந்த கோவில் நீர்வழித்தடத்தில் இருப்பதாகவும், அதை அகற்ற இருப்பதாகவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதன்படி, நேற்று கோவிலை இடிக்க ஊராட்சித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். அப்போது இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமையில், மாவட்ட செயலாளர் கார்த்திக், தேனி நகர தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் சிலர் அங்கு வந்து கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அதே ஊரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களும் அங்கு திரண்டு வந்து கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் தேனி தாசில்தார் சரவணபாபு அங்கு வந்தார். அவர், போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோவில் அமைந்துள்ள பகுதியை முழுமையாக சர்வே செய்ய வேண்டும் என்றும், கோவில் மட்டுமின்றி நீர்வழித்தடத்தை முழுமையாக அளவீடு செய்து அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து முறையான நோட்டீஸ் கொடுத்து, சர்வே பணிகள் மேற்கொண்ட பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்து, கோவில் இடிக்கும் முயற்சியை தற்காலிகமாக கைவிட்டனர். அதன்பிறகு மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்