தேனி அருகேநிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி:பாதிக்கப்பட்ட மக்கள் புகார்

தேனி அருகே நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.

Update: 2023-07-27 18:45 GMT

நிதி நிறுவனம்

தேனி அருகே ஒரு தம்பதியினர் ஏலச்சீட்டு மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். அதில் முதலீடு செய்தும், சீட்டு பணம் செலுத்தியும் பணத்தை திரும்ப பெற முடியாமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏலச்சீட்டு நடத்தியவர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் கொடுத்தனர். இந்நிலையில் மீண்டும் புகார் கொடுக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பாதிக்கப்பட்ட மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று வந்தனர்.

பல கோடி ரூபாய் மோசடி

அப்போது அவர்கள் கூறும்போது, 'வடபுதுப்பட்டியை சேர்ந்த மக்கள் பலரும் இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தோம். சீட்டு பணமும் செலுத்தினோம். முதலில் சீட்டுப் பணத்தை சரியாக கொடுத்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. ரூ.1 லட்சம் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர். அந்த வகையில் பல கோடி ரூபாயை மோசடி செய்து விட்டு சம்பந்தப்பட்ட தம்பதியினர் தலைமறைவாகி விட்டனர்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஏற்கனவே புகார் செய்தபோது, பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகார் மனுவை பரிந்துரை செய்வதாக கூறினர். ஆனால் இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மீண்டும் மனு கொடுக்க வந்தோம். உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் பணத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்' என்றனர். பின்னர் அவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்