ஓட்டப்பிடாரம் அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது

ஓட்டப்பிடாரம் அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 37 பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2022-06-29 11:43 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 37 பயணிகள் உயிர் தப்பினர்.

படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து தூத்துக்குடி வழியாக கோவைக்கு நேற்று முன்தினம் இரவில் தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. படுக்கை வசதி கொண்ட அந்த பஸ்சில் 37 பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ்சை திருச்செந்தூர் அருகே காயாமொழியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் சகாயராஜ் (வயது 38) ஓட்டிச் சென்றார்.

இரவு 11 மணியளவில் தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டப்பிடாரம் அருகே புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடியை கடந்து பஸ் சென்று கொண்டிருந்தது.

கொழுந்து விட்டு எரிந்த தீ

அப்போது பஸ்சின் முன்பக்க என்ஜினில் இருந்து திடீரென்று தீப்பொறி பறந்து வந்தது. உடனே பஸ்சை சாலைேயாரமாக நிறுத்தி விட்டு டிரைவர் அதனை சரிபார்க்க முயன்றார். அப்போது என்ஜினில் குபுகுபுவென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரையும் வேகமாக கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார்.

பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கிய சிறிதுநேரத்தில் பஸ் முழுவதும் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பயணிகள் உடமைகள் தீக்கிரை

உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். எனினும் பெரும்பாலான பயணிகளின் உடைமைகள் பஸ்சில் இருந்ததால், அவைகள் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்