கம்பம் அருகே மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி

கம்பம் அருகே மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்;

Update: 2022-06-19 16:58 GMT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் மகன் கோபிநாத் (வயது 26). இவர் நேற்று  இரவு அனுமந்தன்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கம்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

கம்பம்- உத்தமபாளையம் சாலையில் க.புதுப்பட்டியில் தனியார் பள்ளிக்கூடம் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான கேரள மாநிலம் கட்டப்பனையை சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் இறந்த கோபிநாத்துக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்