தட்டார்மடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
தட்டார்மடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.;
தட்டார்மடம்:
தட்டார்மடத்தில் இருந்து புத்தன்தருவை செல்லும் வழியில் வஞ்சிமணியார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உண்டியலை நேற்று தட்டார்மடம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் முத்துக்குமார்(வயது30) உடைத்து பணத்தை திருடினாராம். இதை கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவருவதற்குள் முத்துக்குமார் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் சம்பவ கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முத்துக்குமாரை தேடிவருகிறார்.