தாளவாடி அருகே மீண்டும் மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத கருப்பன் யானை

தாளவாடி அருகே மீண்டும் மயக்க ஊசி செலுத்தியும் மயங்காமல் கருப்பன் யானை வனப்பகுதிக்குள் தப்பி சென்றுவிட்டது. இதனால் கருப்பன் யானையை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-01-19 21:18 GMT

தாளவாடி

தாளவாடி அருகே மீண்டும் மயக்க ஊசி செலுத்தியும் மயங்காமல் கருப்பன் யானை வனப்பகுதிக்குள் தப்பி சென்றுவிட்டது. இதனால் கருப்பன் யானையை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருப்பன் யானை

தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த 1 ஆண்டுக்கு முன்பு வெளியேறிய கருப்பன் என்ற யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. இதைத்தொடர்ந்து கருப்பன் யானையை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம், அரிசி ராஜா, கபில்தேவ் என 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி தாளவாடியை அடுத்த இரியபுரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு கருப்பன் யானை வந்தது. இதுபற்றி அறிந்ததும், கும்கி யானையுடன், வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து சென்றனர். அப்போது கருப்பன் யானையை பிடிக்க மருத்துவ குழுவினர் 2 மயக்க ஊசிகளை செலுத்தினர். எனினும் மயக்க ஊசிக்கு மயங்காமல் கருப்பன் யானையானது அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று தப்பியது.

வனப்பகுதிக்குள் தப்பியது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட கல்மாண்டிபுரத்தில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்துக்குள் கருப்பன் யானை புகுந்தது. உடனே மருத்துவ குழுவினர் அங்கு சென்று கருப்பன் யாைனக்கு 1 மயக்க ஊசி செலுத்தினர். அந்த மயக்க ஊசிக்கு மயங்காமல், அடர்ந்த வனப்பகுதிக்குள் கருப்பன் யானை சென்றுவிட்டது.

இதனிடையே நெய்தாளபுரம் வனப்பகுதியில் கருப்பன் யானையின் நடமாட்டம் உள்ளதாக நேற்று மதியம் வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினருக்கு தகவல் கிடைத்தது. உடனே மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து கருப்பன் யானைக்கு மருத்துவ குழு சார்பில் மீண்டும் 2 மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இந்த மயக்க ஊசியிலும் கருப்பன் யானை மயங்காமல் வனப்பகுதிக்குள் சென்று தப்பியது.

தற்காலிக நிறுத்தம்

இதையடுத்து மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த 2 நாட்களாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. எனவே யானையின் உடம்பில் செலுத்தப்பட்ட மருந்தின் வேகம் முற்றிலும் குறைய வேண்டும். இதனால் கருப்பன் யானையை பிடிக்கும் பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் கருப்பனை பிடிக்கும் பணி வருகிற 26-ந் தேதி தொடங்கும். அதுவரை தோட்டத்துக்குள் கருப்பன் யானை புகுந்தால் விவசாயிகள் பாதுகாப்பா இருக்க வேண்டும்,' என தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்