ஸ்ரீவைகுண்டம் அருகேஅரசு பள்ளிக்கூடத்தில் பயங்கர தீ விபத்து
ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பள்ளிக்கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மாணவர்களுக்கான இலவச சீருடைகள், புத்தகப்பைகள் எரிந்து சாம்பலானது.
பள்ளிக்கூடத்தில் தீ விபத்து
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பழைய கட்டிடம் உள்ளது. ஓட்டு மேற்கூரையாலான இந்த கட்டிடத்தில் கருங்குளம் யூனியனில் உள்ள 86 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக இலவச சீருடைகள், புத்தகப்பைகள் மற்றும் மாணவர்களிடம் இருந்து வாங்கிய பழைய புத்தகங்களும் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் வழக்கம்போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அப்போது பழைய கட்டிடத்தில் இருந்த சீருடைகள், புத்தகப்பைகள், புத்தகங்கள் போன்றவற்றில் திடீரென்று தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
கட்டிட மேற்கூரை சரிந்தது
அப்போது காற்று பலமாக வீசியதால் அந்த கட்டிடம் முழுவதும் மளமளவென்று தீ பரவியது. மேலும் கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள பனங்கட்டைகளும் தீப்பிடித்து எரிந்ததால் ஓடுகளுடன் திடீரென்று சரிந்து விழுந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேசுபால் ஞானதுரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
தீ விபத்தில் பழைய கட்டிடத்தில் இருந்த 86 அரசு பள்ளி மாணவர்களுக்கான 7,528 இலவச சீருடைகள், 3,878 இலவச புத்தகப்பைகள் மற்றும் பழைய புத்தகங்கள் எரிந்து சேதமடைந்தன. சேதமடைந்த கட்டிடத்தை மாவட்ட கல்வி அலுவலர் ரமா, தாசில்தார் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.\
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததால், அருகில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.