ஸ்ரீமுஷ்ணம் அருகே கழுத்தை அறுத்து விவசாயி படுகொலை முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை
ஸ்ரீமுஷ்ணம் அருகே கழுத்தை அறுத்து விவசாயி படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் நடுத்தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல் மகன் சந்திரன் (வயது 57). விவசாயி. இவருடைய மனைவி கஸ்தூரி (50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் சுபாஷினி திருமணமாகி, விவாகரத்து பெற்று பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். இளைய மகள் சுபலட்சுமி தஞ்சையில் ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சந்திரன், சாப்பிட்டு விட்டு தனது வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
கழுத்தை அறுத்து கொலை
அப்போது நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், சந்திரனின் கழுத்தை சரமாரியாக அறுத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார்.
இந்த சத்தம் கேட்டு கஸ்தூரி மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே சந்திரன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைபார்த்து கஸ்தூரி மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நிலப்பிரச்சினை
இந்த சம்பவம் பற்றி அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்திரனின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். அதில், சந்திரனுக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையில் அடிக்கடி நிலப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் கழுத்தை அறுத்து விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.