சத்தியமங்கலம் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சாவு
சத்தியமங்கலம் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் இறந்தாா்.;
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே பெரியூரில் கீழ்பவானி வாய்க்கால் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள சிக்கம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (வயது23) என்பவரும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று மாலை டிராக்டரின் பின்னால் தண்ணீர் தொட்டியை பொருத்தி அதில் தண்ணீர் ஏற்றி வந்து கொண்டிருந்தார். சத்தி- உக்கரம் ரோட்டில் வாய்க்கால் தோட்டம் அருகே சென்றபோது திடீரென டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் தண்ணீர் தொட்டியும் டிராக்டரில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.