ஓட்டப்பிடாரம் அருகேஆள்மாறாட்டம் செய்து நிலம் மோசடி

ஓட்டப்பிடாரம் அருகே ஆள்மாறாட்டம் செய்து நிலம் மோசடி;

Update: 2023-04-13 18:45 GMT

ஓட்டப்பிடாரம் அருகே ஆள்மாறாட்டம் செய்து நிலம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மோசடி

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் கொல்லங்கிணறை சேர்ந்தவர் குருவப்பன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 67). இவருடைய தந்தை கணபதி என்பவரது பெயரில் நாரைக்கிணறு மருதன்வாழ்வு கிராமத்தில் 4 ஏக்கர் 81 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர் கணபதி இறந்துவிட்டதாலும், அவரது வாரிசுகள் சொத்து உள்ள ஊரில் வசிக்கவில்லை. இந்த நிலையில் சிலர் அந்த நிலத்தை மோசடியாக விற்பனை செய்து இருப்பதை அறிந்த கிருஷ்ணவேணி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் மனு அளித்தார்.

அதன்பேரில் நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவில்பட்டி மந்திதோப்பை சேர்ந்த கணபதி மகன் சுப்புராஜ் (67), நாரைக்கிணறு மருதன்வாழ்வு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் லெனின் (46) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணம் தயாரித்து மோசடியாக, ஓட்டுடன்பட்டி பகுதியை சேர்ந்த ஏமன் மகன் ஆறுமுகம், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்த சண்முகசாமி மகன் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உதவியுடன் கிரையம் செய்து இருப்பது தெரியவந்தது.

கைது

இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி தலைமையிலான போலீசார் சொத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக சுப்புராஜ், லெனின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்