மயிலாடும்பாறை அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பால் வறண்ட கண்மாய்கள்

மயிலாடும்பாறை அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பால் கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன.

Update: 2023-06-13 18:45 GMT

மயிலாடும்பாறை அருகே சிறுகுளம், பெரியகுளம் ஆகிய 2 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களுக்கு தங்கம்மாள்புரம் அருகே மூலவைகை ஆற்றில் இருந்து வரத்து வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. கண்மாய்களில் மரம், செடி, கொடிகள் புதர்மண்டி ஆக்கிரமித்து காணப்பட்டது. இதனால் கண்மாய்களில் நீரை தேக்கி வைத்து பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து விவசாயிகளின் தொடர் கோரிக்கையின்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2 கண்மாய்களையும் தூர்வாரி சீரமைக்க அரசு ரூ.1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து கண்மாய் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. ஆனால் இந்த பணிகள் முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படாததால் செடிகள் அதிக அளவு ஆக்கிரமித்துள்ளன. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கின்போது மட்டும் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருந்தாலும் வரத்து வாய்க்கால் வழியாக கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில்லை. இதனால் கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன. எனவே வரத்து வாய்க்கால்களை சீரமைப்பதுடன், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்