குறிஞ்சிப்பாடி அருகே கோவில் கட்ட அனுமதி வேண்டி கிராம மக்கள் உண்ணாவிரதம்

குறிஞ்சிப்பாடி அருகே கோவில் கட்ட அனுமதி வேண்டி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-06-07 18:14 GMT

குறிஞ்சிப்பாடி

கருத்துவேறுபாடு

குறிஞ்சிப்பாடி அருகே வரதராஜன் பேட்டை ஊராட்சியில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோவில் கிராம மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து ஒரு தரப்பினர் அங்குள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் கோவில் கட்டும் பணியை தொடங்கினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அனுப்பினர்.

உண்ணாவிரதம்

இதையடுத்து குறிஞ்சிப்பாடி தாசில்தார் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இரு தரப்பினரிடையே பிரச்சினை தொடந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று விநாயகர் கோவில் கட்ட அனுமதி வேண்டியும் மாரியம்மன் கோவிலை பொது கோவிலாக அறிவிக்க வலியுறுத்தியும், தொடர்ந்து பொய் புகார்களை அனுப்பி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் கிராம மக்கள் சுமார் 150 பேர் கையில் பதாகைகளுடன் திடீர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவலறிந்து குறிஞ்சிப்பாடி தாசில்தார் சுரேஷ்குமார், குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அப்போது மாரியம்மன் கோவிலை பொது கோவிலாக மாற்றுவதற்கும், விநாயகர் கோவில் கட்ட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்