கோவில்பட்டி அருகே பார்வையற்றோருக்கு தொழிற்கூடம் அமைக்க இடம் தேர்வு
கோவில்பட்டி அருகே பார்வையற்றோருக்கு தொழிற்கூடம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே குலேசகரபுரம் கிராமத்தில் பார்வையற்றோர் சங்க உறுப்பினர்களுக்கு தொழிற்கூடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
பார்வையற்றோர் தொழிற்கூடம்
கோவில்பட்டி தாலுகா லிங்கம்பட்டி பஞ்சாயத்து குலசேகரபுரம் கிராமத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் கோவில்பட்டி பார்வையற்றோர் சிறு தொழில் கூட்டமைப்பு சங்க உறுப்பினர்களுக்கு தொழிற்கூடம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது கோவில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுவர்ண லதா, கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜெயா, பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராஜேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் கூறுகையில்,
இலவச மருத்துவமுகாம்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 24-ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் ராஜா பள்ளியில், உடன்குடி டி.என்.டி.டி.ஏ. பள்ளியிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் ஊரக பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படும். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உரிய ஏற்பாடு செய்யப்படும்.
கோவில்பட்டிக்கு குடிநீர் விநியோகிக்க 4 மோட்டார் உள்ளன. இதில், 2 மோட்டார்கள் பழுதாகி இருந்தன. ஒரு மாதத்துக்கு முன்னர் இந்த மோட்டார்கள் மாற்றப்பட்டு விட்டன. கூடுதலாக 2 மோட்டார்கள் கேட்டுள்ளனர். மேலும், கோவில்பட்டிக்கு தனியாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. எனது(கலெக்டர்) தலைமையில் குழு அமைத்து, நகராட்சி, பேரூராட்சிக்கு தேவையான நிதி குறித்து பரிந்துரை கடிதம் அனுப்புமாறு உள்ளாட்சித்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினேன். இந்த வார இறுதியில் கடிதம் அனுப்ப உள்ளோம். நிதி வந்தவுடன் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார்.