கவுந்தப்பாடி அருகேமுதியவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
கவுந்தப்பாடி அருகே முதியவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.;
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே உள்ள தர்மாபுரி பிள்ளையார் கோவில் 2-வது வீதியை சேர்ந்தவர் நாராயணன். அவருடைய மகன் கருணாநிதி (வயது 62). இவர் தனியார் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாசம் மகன் பிரவீன்குமார் (வயது 29). இவர் தற்போது தர்மாபுரி அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் குடியிருந்து கொண்டு கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். கருணாநிதி வீட்டின் முன்புறம் கட்டிட பராமரிப்பு பணி நடந்துவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணி அளவில் பிரவீன்குமார் கருணாநிதி வீட்டு முன்பு நின்று கொண்டு மது பாட்டிலின் மூடியை திறக்க கத்தி கேட்டுள்ளார். உடனே அவரும் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து கொடுத்துள்ளார். அதை வைத்து பிரவீன்குமாரும் மது பாட்டிலின் மூடியை திறந்து மதுவை குடித்துவிட்டு அங்கேயே நின்று கொண்டிருந்துள்ளார்.
இதனால் கருணாநிதி அவரிடம், நீ இங்கிருந்து செல்லாவிட்டால் உன் முதலாளியிடம் கூறிவிடுவேன் என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். இந்த நிலையில் ஆத்திரமடைந்து பிரவீன்குமார் கருணாநிதியை கெட்ட வார்த்தைகளால் திட்டியும், தான் கையில் வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் கருணாநிதி வயிற்றில் குத்தியும் உள்ளார். பின்னர் கத்தியை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார். காயம் அடைந்த கருணாநிதி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர்.