கள்ளக்குறிச்சி அருகேஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.6½ லட்சம் நகை-பணம் கொள்ளைஇரும்பு பெட்டியை தூக்கி சென்று மர்மநபர்கள் கைவரிசை

கள்ளக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் இரும்பு பெட்டியை தூக்கி சென்று ரூ.6½ லட்சம் நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

Update: 2022-12-29 19:00 GMT

கள்ளக்குறிச்சி அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரான இவர், அதே பகுதியில் உள்ள நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் ராமலிங்கமும், மற்றொரு அறையில் அவருடைய மாமியார் செல்லம்மாளும்(85) தூங்கினர்.

இந்த நிலையில் நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள அறையில் 18 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் வைத்திருந்த இரும்பு பெட்டியை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் தூக்கிச்சென்றிருப்பது தெரியவந்தது.

தண்டவாளம் அருகே கிடந்த இரும்பு பெட்டி

இதனால் அதிர்ச்சியடைந்த ராமலிங்கம், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் விருத்தாசலம்-சேலம் ரெயில்வே தண்டவாளம் அருகே ராமலிங்கம் வீட்டில் இருந்து தூக்கிச்சென்ற இரும்பு பெட்டி கிடந்தது. ஆனால் அதில் வைத்திருந்த நகை-பணத்தை காணவில்லை.

வலைவீச்சு

நள்ளிரவில் வீட்டின் கதவை நைசாக திறந்த மர்மநபர்கள், வீட்டில் உள்ள இரும்பு பெட்டியை தூக்கி வந்துள்ளனர். பின்னர் ரெயில்வே தண்டவாளம் அருகே வைத்து இரும்பு பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.6½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்