கயத்தாறு அருகேபோலி மதுபாட்டில்கள் விற்றதந்தை, மகன் சிக்கினர்
கயத்தாறு அருகே போலி மதுபாட்டில்கள் விற்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே போலி மதுபாட்டில்கள் விற்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
போலி மது விற்பனை
கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 47). இவர் இப்பகுதியில் ரேடியோ செட் வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். இவரது மகன் பிரகாஷ் என்ற படையப்பா(24). இவர் ஐ.டி.ஐ. படித்துள்ளார்.
இந்த நிலையில், கோபாலும், அவரது மகனும் பாண்டிச்சேரி, கோவாவில் இருந்து பிளாஸ்டிக் டிரம்மில் போலி பிராந்தியை மொத்தமாக கிராமத்துக்கு கடத்தி வந்து, காலி மதுபாட்டில்களில் புதிதாக ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்து வருவதாக கயத்தாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தந்தை, மகன் சிக்கினர்
இதை தொடர்ந்து போலீசார் ஆத்திகுளத்துக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்குள்ள சுடுகாடு பகுதியில் இருந்த கோபால், அவரது மகன் பிரகாஷை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த இருவரும், நீண்டநேர விசாரணைக்கு பிறகு, ஆத்திகுளம் சுடுகாடு அருகே பன்றி அடைக்கும் தொழுவத்தை ஒட்டியுள்ள ஒரு இடத்தில் போலி மதுபாட்டில்களை தயாரித்து பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததை ஒப்புக் கொண்டனர்.
சிறையில் அடைப்பு
அந்த இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான காலி மதுபான பாட்டிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலி மதுபான பாட்டில்கள், போலி ஸ்டிக்கர்களை போலீசார் பறிமுதல் ெசய்தனர். போலி மதுபாட்டில்கள் விற்ற வகையில் அவர்களிடம் இருந்த ரூ.10 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ஆண்டோணிதீலீப் ஆகியோர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கோபால், பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், நீதிபதி உத்தரவின் பேரில் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.