எட்டயபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பஞ்சாயத்து துணைத்தலைவர் பலி

எட்டயபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டவிபத்தில் பஞ்சாயத்து துணைத்தலைவர் பலியானார்.

Update: 2022-11-04 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பஞ்சாயத்து துணைத்தலைவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

பஞ்சாயத்து துணைத்தலைவர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மஞ்சநாயக்கன்பட்டி பஞ்சாயத்து பொம்மல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 67). விவசாயியான இவர் மஞ்சநாயக்கன்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்தார்.

இவர் நேற்று மாலையில் தன்னுடைய நண்பரான டி.சண்முகபுரத்தைச் சேர்ந்த சந்திரனுடன் (65) மோட்டார் சைக்கிளில் எட்டயபுரத்தில் இருந்து மஞ்சநாயக்கன்பட்டிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

எட்டயபுரம் அருகே இளம்புவனத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் கருப்பசாமி (17), முத்துப்பாண்டி மகன் கனகராஜ் (18) ஆகிய 2 பேரும் புதிய மோட்டார் சைக்கிளில் எப்போதும்வென்றானுக்கு புறப்பட்டு சென்றனர். எட்டயபுரம் அருகே மஞ்சநாயக்கன்பட்டி விலக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற பொன்ராஜ், சந்திரன் ஆகியோரது மோட்டார் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த சந்திரன், கருப்பசாமி, கனகராஜ் ஆகிய 3 பேரும் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.

3 பேருக்கு தீவிர சிகிச்சை

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், எப்போதும் வென்றான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இறந்த பொன்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்