சின்னமனூர் அருகே ரேஷன் கடை, கேண்டீனை சேதப்படுத்தியஅரிக்கொம்பன் யானை:அரிசி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பியது

சின்னமனூர் அருகே ரேஷன் கடை, கேண்டீனை அரிக்கொம்பன் யானை சேதப்படுத்தியது. அரிசி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் யானை திரும்பி சென்றது.

Update: 2023-05-15 18:45 GMT

அரிக்கொம்பன் யானை

கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியில் அரிக்கொம்பன் என்ற காட்டுயானை ஒன்று அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர். பின்னர் அந்த யானை குமுளி அருகே உள்ள தேக்கடி பெரியார் புலிகள் சரணாலயத்தில் விடப்பட்டது. அங்கிருந்த அரிக்கொம்பன் யானை கடந்த சில வாரத்திற்கு முன்பு மேகமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட தேனி மாவட்டம் இரவங்கலாறு மற்றும் பத்து கோடு பகுதிக்குள் புகுந்தது.

பின்னர் அங்கிருந்த வீடுகளை சேதப்படுத்தியது. மேலும் அரிசியை தின்று தீர்த்தது. இதையடுத்து சின்னமனூர் வனத்துறையினர் அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் சிக்னல் மூலம் அதன் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதில் பத்துக்கோடு பகுதியில் கடந்த 4 நாட்களாக ஆக்ேராஷமாக சுற்றித்திரிந்தது தெரியவந்தது.

ரேஷன் கடை, கேண்டீன் சேதம்

இந்நிலையில் நேற்று அதிகாலை மணலாறு பகுதியில் உள்ள ரேஷன் கடை மற்றும் கேண்டீனை அரிக்கொம்பன் யானை சேதப்படுத்தியது. இந்த யானைக்கு பிடித்த உணவு அரிசி என்பதால் அதன் வாசனை இருக்கும் இடத்தை தேடி சுற்றித்திரியும். இதனால் பல்வேறு ரேஷன் கடை மற்றும் வீடுகளை உடைத்து அங்கிருந்து அரிசியை தின்று தீர்த்தது.

இதன் காரணமாக அந்த யானை அரிசி கொம்பன் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் அரிசியை கேரளாவில் அரி என்பார்கள். அதனால் அரிக்கொம்பன் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் ரேஷன் கடையில் அரிசி ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய யானை சில மணி நேரம் அங்கேயே முகாமிட்டிருந்தது. இதைக்கண்ட அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடி வீடுகளுக்குள்ளே முடங்கினர்.

பின்னர் அவர்கள் கூச்சல் போட்டதை தொடர்ந்து அரிக்கொம்பன் யானை அப்பர் மணலாறு வழியாக வட்டப்பாறை பகுதிக்கு சென்றது. இதற்கிடையே யானை நடமாட்டத்தால் அந்த பகுதியில் உள்ள 7 ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் ஏதும் கொண்டு வரப்படவில்லை. மேலும் கடை ஊழியர்களும் பணிக்கு வர அச்சம் அடைகின்றனர்.

கண்காணிப்பதில் சிரமம்

இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ரேஷன் கடையை சேதப்படுத்திய அரிக்கொம்பன் யானை தொடர்ந்து வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. தற்போது ஹைவேவிஸ் பகுதியில் தொடர்ந்து மேகமூட்டமாக இருப்பதால் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் சிக்னலில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் யானையை கண்காணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்