போடி அருகே ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி: 5 பேர் படுகாயம்
போடி அருகே ஆட்டோக்கள் நேருக்கு நேர் ேமாதிய விபத்தில் டிரைவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.;
சாலையின் குறுக்கே நாய்
போடி அருகே உள்ள முந்தல் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் கனிராஜா (55). ஆட்டோ டிரைவர். முந்தலை சேர்ந்தவர்கள் செல்லம்மாள் (70), முருகேசன் (53), வீரலட்சுமி (70). நேற்று மாலை இவர்கள் 3 பேரையும் கனிராஜா, போடியில் இருந்து தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு முந்தலுக்கு சென்று கொண்டிருந்தார்.
போடி-முந்தல் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் ஆட்டோவை திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, எதிரே முந்தலில் இருந்து போடி நோக்கி சென்ற ஆட்டோ மீது மோதியது.
டிரைவர் பலி
இதில் 2 ஆட்டோக்களும் தலைகுப்புற கவிழ்ந்ததில் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கின. இந்த விபத்தில் 2 ஆட்டோக்களின் இடிபாடுகளில் சிக்கிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த குரங்கணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஆட்டோ டிரைவர் கனிராஜாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.