பவானி அருகேகாவிரி ஆற்றில் குதித்து பி.எஸ்.என்.எல். ஊழியர் தற்கொலைகடன் தொல்லையால் விபரீத முடிவு

பவானி அருகே கடன் தொல்லையால் காவிரி ஆற்றில் குதித்து பி.எஸ்.என்.எல். ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2023-05-27 21:08 GMT

பவானி

பவானி அருகே கடன் தொல்லையால் காவிரி ஆற்றில் குதித்து பி.எஸ்.என்.எல். ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.

பி.எஸ்.என்.எல். ஊழியர்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒலகடம் இலந்தகுட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 57). பி.எஸ்.என்.எல். ஊழியர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தானாக முன் வந்து ரங்கசாமி பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வெளியே சென்று வருகிறேன் என்று வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றவர் இரவு நீ்ண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து ரங்கசாமியின் மகன் சந்தோஷ் தந்தையின் செல்போனை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சந்தோஷ் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

உடல் மிதந்தது

இந்தநிலையில் பவானி ஊராட்சிக்கோட்டை ஜீவாநகர் பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் ரங்கசாமியின் வேட்டி, சட்டை, செருப்பு, செல்போன் கிடப்பதாக உறவினர் ஒருவர் சந்தோசுக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். உடனே சந்தோஷ் அங்கு சென்று பார்த்தார். அப்போது அது தனது தந்தையின் வேட்டி, சட்டை, செல்போன் என்று தெரிந்தது. இதனால் அவர் காவிரி ஆற்றில் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்று அவர் எண்ணினார். இதையடுத்து காவிரிக்கரையில் உறவினர்களுடன் சென்று தேடிப்பார்த்தார்.

அப்போது ரங்கசாமியின் வேட்டி, சட்டை கிடந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அவரின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. அதைப்பார்த்து சந்தோஷ் கதறி துடித்தார்.

கடன் தொல்லை

இதுகுறித்து உடனே பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரங்கசாமி ஏற்கனவே பலரிடம் கடன் வாங்கி இருந்துள்ளார். அதை அடைப்பதற்காகத்தான் அரசு வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். ஆனாலும் அவரால் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வற்புறுத்தியாக தெரிகிறது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாகவே ரங்கசாமி மன வேதனையில் இருந்துள்ளார்.

ஆற்றில் குதித்து தற்கொலை

இந்தநிலையில்தான் கடன் தொல்லை தாங்க முடியாமல் விபரீத முடிவு எடுத்த அவர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.எஸ்.என்.எல். ஊழியர் கடன் தொல்லை தாங்க முடியாமல் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்