பவானிசாகர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது
பவானிசாகர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனா்.;
பவானிசாகர்
பவானிசாகர் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் கொத்தமங்கலம் வனவர் கர்ணன், பண்ணாரி வனக்காப்பாளர் ஞானம் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பண்ணாரி அருகே 3 பேர் வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்துடன் சுருக்கு கம்பிகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர்கள் பண்ணாரி அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்த வெள்ளையன் (வயது 62), ரங்கசாமி (58), முருகேஷ் (32) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக முயன்றதும்,' தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து அரிவாள், சுருக்கு கம்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.