ஆசனூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்
ஆசனூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் மேரக்காய் பயிர் நாசம் அடைந்தது.
ஆசனூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் மேரக்காய் பயிர் நாசம் அடைந்தது.
காட்டு யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. தீவனம் மற்றும் தண்ணீரை தேடி யானைகள் அடிக்கடி காட்டை விட்டு வெளியேறி கிராமங்களுக்கு படையெடுக்கின்றன. அவ்வாறு வெளியே வரும் யானைகள் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாக உள்ளது.
யானைகள் தோட்டங்களுக்குள் நுழைவதை தடுக்க விவசாயிகள் பலர் தோட்டங்களிலேயே காவல் காக்கிறார்கள். சிலர் குடிசை அமைத்து அங்கேயே இரவு தங்கிக்கொள்கிறார்கள். யானைகள் தோட்டங்களுக்குள் நுழையும்போது விவசாயிகள் தனியாக விரட்ட முயன்றால் யாைனகள் தாக்குவதற்காக ஆவேசத்துடன் ஓடிவருகின்றன.
மேரக்காய் பயிர் நாசம்
இந்தநிலையில் ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட கோட்டாடை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் 2 ஏக்கரில் மேரக்காய் சாகுபடி செய்துள்ளார். நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் ரவிச்சந்திரனின் தோட்டத்தில் புகுந்து மேரக்காய் பயிர்களை நாசம் செய்தன.
சத்தம் கேட்டு தோட்டத்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து பார்த்த ரவிச்சந்திரன் யானைகள் பயிரை நாசம் செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்து விவசாயிகளை செல்போனில் உதவிக்கு அழைத்தார். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து யானைகளை தீப்பந்தம் காட்டி விரட்டினர். ஆனாலும் ½ ஏக்கர் அளவிலான மேரக்காய் பயிர்களை நாசம் செய்த பின்னரே யானைகள் சென்றன. சேதம் அடைந்த பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.