ஆறுமுகநேரி அருகேநடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது

ஆறுமுகநேரி அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது;

Update: 2023-06-22 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த மதுரையைச் சேர்ந்த பக்தர்கள் உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருச்செந்தூர் கோவிலுக்கு...

மதுரை தெப்பக்குளம் கலாம் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 43). இவரது உறவினர் மதுரை காமராஜர் சாலையை சேர்ந்த கணேசன் மகன் ஹாரிஸ் (25).

இவர்கள் 2 பேரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் காலையில் காரில் புறப்பட்டனர். காரை மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த அப்துல் ரஹீம் (40) என்பவர் ஓட்டினார்.

கார் தீப்பிடித்தது

கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு 9 மணி அளவில் திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு காரில் புறப்பட்டனர்.

ஆறுமுகநேரி அருகே சாகுபுரத்தில் ஒரு வளைவில் சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதை கவனித்த டிரைவர் அப்துல் ரஹீம் உடனடியாக காரை நடுரோட்டில் நிறுத்தினார். காரில் இருந்து 3 பேரும் உடனே கீழே இறங்கினார்கள். அப்போது திடீரென்று கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தால் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

எரிந்து நாசம்

இதுகுறித்து தகவல் அறிந்த சாகுபுரம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை தீயணைப்பு அலுவலர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்