அம்மாபேட்டை அருகே கோவிலுக்கு தானமாக நிலத்தை எழுதி வைத்த மின்வாரிய ஊழியர்; மகன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
அம்மாபேட்டை அருகே மின்வாரிய ஊழியர் கோவிலுக்கு தானமாக நிலத்தை எழுதி வைத்தார். இதை மீட்பதற்காக மகன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே மின்வாரிய ஊழியர் கோவிலுக்கு தானமாக நிலத்தை எழுதி வைத்தார். இதை மீட்பதற்காக மகன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலுக்கு தானம்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைக்கல்மேட்டைச் சேர்ந்தவர் பழமலை (வயது 63). மின்வாரிய ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுடைய மகன் பிரபுகுமார் (38), மகள்கள் மோகனவள்ளி, காந்திமதி ஆகியோர். பழமலையின் மகன், மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.
இந்த நிலையில் பழமலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தை பிரிந்து வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பல்வேறு இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் பழமலை கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். பின்னர் அங்குள்ள அறநிலையத்துறை அதிகாரிகளை சந்தித்து, தனக்கு சொந்தமாக குதிரைக்கல்மேட்டில் நிலம், வீடு உள்ளதாகவும், அதை கோவிலுக்கு தானமாக எழுதி வைப்பதாகவும் கூறி தான ஒப்பந்தபத்திரம் செய்து வைத்துள்ளார்.
அறிவிப்பு பலகை
மேலும் அம்மாபேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இந்த நிலையில் சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் கோவிலுக்கு தானமாக அளித்த நிலம் குறித்து ஆய்வு செய்ய குதிரைக்கல்மேட்டுக்குச் சென்றனர். அங்கு கோவிலுக்கு சொந்தமான இடத்தை கண்டறிந்து இது கோவிலுக்கு சொந்தமான நிலம் என்பது குறித்த அறிவிப்பு பலகையை வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த பழமலையின் மகன் பிரபு குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கோவில் ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் தனது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய நிலத்தை பழமலை கோவிலுக்கு தானமாக எழுதி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
சாலை மறியல்
இதனால் பிரபுகுமார் அதிர்ச்சி அடைந்தார். இந்தநிலையில் பிரபுகுமார் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்தை மீட்டுதரக்கோரி நேற்று மாலை பவானி - மேட்டூர் சாலையில் உள்ள தனது வீட்டின் முன்பு அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டார். அக்கம்பக்கத்தினரும் அவருக்கு ஆதரவாக திரண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் பிரபுகுமாரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதற்கிடையே கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தரக்கோரி பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார்மனு அளித்துள்ளனர். மகன், மகள்களுக்கு தெரியாமல் தனது நிலத்தை மின்வாரிய ஒப்பந்ததாரர் தானமாக வழங்கிய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.