அம்மாபேட்டை அருகே விஷக்காய் சாப்பிட்ட 21 மாணவ-மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
அம்மாபேட்டை அருகே விஷக்காய் சாப்பிட்ட 21 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே விஷக்காய் சாப்பிட்ட 21 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவ-மாணவிகள்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நத்தமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, நத்தமேடு, பழனிவேல்புரம், ராமச்சந்திரபுரம், மணக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடம் வந்திருந்தனர். மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் 6, 7-ம் வகுப்பு படிக்கும் 20 மாணவிகள், ஒரு மாணவன் என 21 பேர் ஒன்றாக வீடு் திரும்பிக்கொண்டிருந்தனர்.
வாந்தி-மயக்கம்
சிறிது தூரம் சென்றதும் அங்கு வளர்ந்திருந்த நாட்டுக்காய் (விஷத்தன்மை கொண்ட காய் என்று கூறப்படுகிறது) செடிகளை மாணவ-மாணவிகள் பார்த்தனர். அதிலுள்ள காய்களை பார்த்ததும் அவர்களில் ஒருவருக்கு அதை பறித்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த காயை பறித்து சாப்பிட்டார். அதை பார்த்ததும் மற்றவர்களுக்கு ஆசை வந்தது. அடுத்தடுத்து ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் என மொத்தம் 21 பேரும் செடிகளில் உள்ள காய்களை பறித்து தின்றனர். பின்னர் அனைவரும் வீட்டு்க்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் இரவில் நாட்டுக்காய் சாப்பிட்ட மாணவ-மாணவிகள் ஒவ்வொருவருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தீவிர சிகிச்சை
இதுகுறித்து மாணவ-மாணவிகளிடம் கேட்டபோது அவர்கள் பள்ளிக்கூடம் அருகே நாட்டுக்காயை பறித்து சாப்பிட்டதாக தெரிவித்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக பூனாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவ-மாணவிகள் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
இதற்கிடையே இந்த தகவல் நத்தமேடு சுற்றுவட்டாரத்தில் காட்டுத்தீ போல் பரவியது. அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் உறவினர்கள், பொதுமக்கள் அனைவரும் தனியார் மருத்துவமனை முன்பு திரண்டனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு அம்மாபேட்டை போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அம்மாபேட்டை அருகே மாணவ-மாணவிகள் நாட்டுக்காய் சாப்பிட்டதால் வாந்தி-மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.