வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா: மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் ஜொலித்த கொலு

சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் 2-ம் நாளான நேற்று, மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் கொலு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.;

Update: 2022-09-27 21:58 GMT

சென்னை,

சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 'சக்தி கொலு' என்ற பெயரில் பிரமாண்ட கொலு வைக்கப்பட்டு உள்ளது. முதல் நாள் கொலு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கொலுவை கண்டு ரசித்தனர்.

இந்த நிலையில் 2-ம் நாளான நேற்று 'சக்தி கொலு'வில் மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிறப்பு ஆராதனையும் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து லலிதா சஹஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சமஹம், ஸ்ரீசுக்தம் நடந்தது. கொலு பாட்டுக்கு பிறகு இரவில் சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. இசை கச்சேரியும் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கொலுவை ரசித்து சென்றனர்.

'வித்யாரம்பம்' நிகழ்ச்சி

நவராத்திரி திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக, மீனாட்சி அம்மனுக்கு அக்டோபர் 2-ந்தேதி காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஏகதின லட்சார்ச்சனை நடக்க உள்ளது.

நவராத்திரியின் நிறைவு பகுதியாக அக்டோபர் 5-ந்தேதியன்று, 2½ வயது முதல் 3½ வயது வரை உள்ள குழுந்தைகளின் விரல் பிடித்து, ஆரம்ப கல்வியை தொடங்கி வைக்கும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்