தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு
கள்ளக்குறிச்சியில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு
கள்ளக்குறிச்சி
தேசிய வாக்காளர் தின விழா கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், கோட்டாட்சியர் பவித்ரா, முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வாக்காளர் தின உறுதிமொழியை அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரியில் நடைபெற்ற முழக்கத்தொடர் எழுதுதல், கட்டுரை போட்டி, சுவரொட்டி வரைதல், ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி, குழு நடனம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு கோப்பை மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான பணிகளை மேற்கொண்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், ரொக்கப்பணம் ஆகியற்றை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கி பேசுகையில், வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக மாநில அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதற்காக சென்னையில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு தமிழ்நாடு கவர்னர் விருது வழங்கி யுள்ளார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிட 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரை சேர்த்து கண்டிப்பாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில் தனிவட்டாட்சியர்(தேர்தல்) பாலகுரு, தாசில்தார் சத்தியநாராயணன், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.