காஞ்சீபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
காஞ்சீபுரத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தேசிய வாக்காளர் தினம்
தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, காஞ்சீபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், பேரணியில் கலந்துக்கொண்ட அவர், வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பின்பு மாவட்ட கலெக்டர் அலுவலக நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பாராட்டு சான்றிதழ்
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடிநிலைஅலுவலர்களான எல்லப்பன், ரவிகுமார், பாலசரஸ்வதி, சந்திரா, ரேவதி ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மாவட்ட அளவில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளில் பங்குப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். பின்பு மகளிர் சுய உதவி குழுக்களால் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டியினை பார்வையிட்டு, வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் வருவாய் கோட்டாட்சியர் நா.மா.கனிமொழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, காஞ்சீபுரம் வட்டாட்சியர் பிரகாஷ், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் இராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.