தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழு ஆய்வு

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-06-09 17:05 GMT

தரம் உயர்வு

குடியாத்தம் அரசு மருத்துவமனையை தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி உள்ளது. மேலும் சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 300-க்கும் அதிகமான பிரசவங்கள் நடைபெறுகிறது. மாதத்திற்கு குறைந்தபட்சம் 75 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கின்றன. பிரசவத்தின் போது குழந்தை இறப்பு என்பதே இல்லை என கூறப்படுகிறது.

தேசிய தரச்சான்று குழு ஆய்வு

இந்த நிலையில் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் லக்ஷயா திட்டத்தின் கீழ் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் நேற்று குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த மருத்துவர் சீமாஜெய்ஸ்வால் தலைமையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த செவிலியர் கண்காணிப்பாளர் இந்திரா உள்ளிட்ட குழுவினர் பிரசவ வார்டு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணி தாய்மார்களுக்கான பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வார்டுகளில் உள்ள வசதிகள், ஆய்வுக்கூடங்கள், ரத்த வங்கி ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்

தொடர்ந்து உள் நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

ஆய்வின்போது வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம்.கண்ணகி, மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் மணிமேகலை, குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன்பாபு, டாக்டர்கள் எஸ்.மஞ்சுநாத், அனிதாகருணாநிதி, சுருதி, மாவட்ட தர ஆலோசகர் டாக்டர் அபிலாஷ், ஒருங்கிணைப்பாளர் சத்யாநந்தகுமார் உள்பட டாக்டர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்