பூவந்தி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு
பூவந்தி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர்.;
திருப்புவனம்
பூவந்தி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர்.
பூவந்தி அரசு ஆஸ்பத்திரி
திருப்புவனம் யூனியனை சேர்ந்த பூவந்தியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு பூவந்தியை சுற்றியுள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 2008-ம் ஆண்டு பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஐ.எஸ.்ஓ. தரச்சான்று கிடைத்தது. பின்பு மாநில சுகாதாரத்துறையும் இங்கு ஆய்வு மேற்கொண்டது.
அதன் பின்பு 2021-ம் ஆண்டு நவம்பரில் மத்திய சுகாதாரத் துறையின் தேசிய தர உறுதிச்சான்று ஆய்வுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் அர்ச்சனா, டாக்டர் கமலேகர் பாட்டீயா ஆகியோர் 2 நாட்களாக பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தனர்.
தரக்குழுவினர் ஆய்வு
இந்த நிலையில் நேற்று பூவந்தி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சமுதாய நல நிலையத்தில்(ஆஸ்பத்திரி) தேசிய தரச் சான்று வழங்கும் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் கோகர், டாக்டர் ஸ்ரீதர்ராவ் ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக சிவகங்கை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் விஜய்சந்திரன் ஆய்வு குழுவினரை வரவேற்றார். பின்பு குத்துவிளக்கு ஏற்றி ஆய்வுகள் தொடங்கப்பட்டது.
அதன்பின்பு தேசிய தரச் சான்று குழுவினர் மருத்துவமனை வளாக தூய்மை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அவசர சிகிச்சை பிரிவு, பரிசோதனை கூடம், எக்ஸ்ரே, இ.ஜி.சி. அறைகள், வருகை பதிவேடு உள்பட 9 பிரிவுகளை ஆய்வு செய்து தங்களது ஆய்வறிக்கைகளை மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வின் போது பூவந்தி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர். இந்த ஆய்வு இன்றும் (சனிக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது.