"தேசிய கல்வி கொள்கை இளைஞர்கள் திறனை அதிகரிக்கும்" - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
தேசிய கல்வி கொள்கை இளைஞர்கள் திறனை அதிகரிக்கும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையில் இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய கல்வி கொள்கை இளைஞர்கள் திறனை அதிகரிக்கும். இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு ஆங்கில திறன் குறைபாடு உள்ளது. தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றியமைக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைக்கிறது.
காலத்திற்கேற்ற கல்வி கிடைக்காததால் இளைஞர்களின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. பொறியியல், அறிவியல் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.