தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி
கோத்தகிரியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கோத்தகிரி,
வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிச்சை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 20 பேர் கலந்துகொண்டு பேரிடர்கள் ஏற்படுவதற்கான காரணங்கள், பேரிடர் ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர்களில் சிக்கியவர்களை காப்பாற்றும் முறைகள் குறித்து விளக்கினர். பேரிடர் காலங்களில் மண் சரிவு, மரம் விழுதல், வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது, பேரிடரில் சிக்கி காயமடைந்தவர்கள், எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், மாரடைப்பு ஏற்பட்டவர்கள் மற்றும் பாம்பு கடித்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் செயல்விளக்கம் அளித்தனர். இதில் வருவாய்த்துறையினர், பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.