'நம்ம ஊரு சூப்பரு' இயக்கம் விழிப்புணர்வு

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்களில் இன்று முதல் ‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்கம் 2-ம் கட்ட விழிப்புணர்வு தொடங்கப்பட உள்ளது என்று கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-04-30 18:45 GMT


நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்களில் இன்று முதல் 'நம்ம ஊரு சூப்பரு' இயக்கம் 2-ம் கட்ட விழிப்புணர்வு தொடங்கப்பட உள்ளது என்று கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நம்ம ஊரு சூப்பரு இயக்கம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நம்ம ஊரு சூப்பரு இயக்கம் விழிப்புணர்வு குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசுகையில்,

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்களில் சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வினை மேம்படுத்திட ஊக்குவித்தல். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை தடைசெய்தல் மற்றும் அதற்கு பதிலாக மாற்றுப்பொருட்கள் (மீண்டும் மஞ்சப்பை இயக்கம்) தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்தல். கழிவுநீர் பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான பணிகளை மேற்கொள்ளுதல்.

2-ம் கட்டமாக

சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்து சுகாதாரமான வாழ்வு வாழ மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நம்ம ஊரு சூப்பரு என்ற சிறப்பு இயக்கம் முதல் கட்டமாக கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது. தற்போது 2-ம் கட்டமாக இன்று(திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம்(ஜூன்) 15-ந்தேதி வரை திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திட நம்ம ஊரு சூப்பரு என்ற சிறப்பு இயக்கம் நடைபெற உள்ளது. இதனை கண்காணித்திட மாவட்ட அளவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர், வட்டார அளவில் உதவி இயக்குனர் நிலையிலான பொறுப்பு அலுவலர்களை நியமித்து ஆணையிடப்பட்டுள்ளது.

வெற்றிபெற செய்ய வேண்டும்

ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் இந்த நம்ம ஊரு சூப்பரு இயக்க நடவடிக்கைகளில் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முழுமையாக ஈடுபட்டு இவ்வியக்கத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஷகிலா, உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) இந்திராதேவி, வட்டார வளாச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்