'சவர்மா' சாப்பிட்ட நாமக்கல் மாணவி பலி: நெல்லை உணவகங்களில் அதிகாரிகள் சோதனை

'சவர்மா' சாப்பிட்ட நாமக்கல் மாணவி இறந்ததை தொடர்ந்து நெல்லையில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது காலாவதியான இறைச்சிகளை கண்டுபிடித்து கிருமிநாசினி தெளித்து அழித்தனர்.;

Update:2023-09-20 01:49 IST

நாமக்கல்லில் ஓட்டலில் 'சவர்மா' வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ராமசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் சைவ மற்றும் அசைவ ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் மொத்தம் 26 கிலோ பொறித்த சிக்கன் குளிர்சாதன பெட்டியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவை கிருமிநாசினி ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் காலாவதி தேதி இல்லாத 50 குபுஸ் பறிமுதல் செய்யப்பட்டது. கடை ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உணவு மாதிரி எடுத்து ஆய்வுக்கும் அனுப்பப்பட்டது.

நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சில கடைகளில் இருந்த காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தக்கூடாது என்றும், தவறு நடைபெற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்