நாமக்கல் கமலாலய குளத்தில் படகு சவாரி மீண்டும் தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாமக்கல் கமலாலய குளத்தில் படகு சவாரி மீண்டும் தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Update: 2022-11-02 18:39 GMT

நாமக்கல் கமலாலய குளத்தில் படகு சவாரி மீண்டும் தொடங்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கமலாலய குளம்

நாமக்கல் நகரின் மைய பகுதியில் மலைக்கோட்டைக்கு தென்கிழக்கில் கமலாலய குளம் உள்ளது. இதனை சுற்றி நேரு பூங்கா, எம்.ஜி.ஆர். பூங்கா மற்றும் அம்மா பூங்கா என 3 பூங்காக்கள் உள்ளன. இந்த கமலாலய குளத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சமாக படகு சவாரி இருந்து வந்தது. அதில் குழந்தைகள், தம்பதிகள் என பல்வேறு தரப்பினர் படகு சவாரி சென்று வந்தனர். 7 படகுகள் பொதுமக்கள் சவாரிக்காக இருந்து வந்தது.

ஆனால் கடந்த 2020-ம்‌ ஆண்டு தண்ணீர் குறைந்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக படகு சவாரி நிறுத்தம் தொடர்ந்தது‌. அதன் பிறகு தற்போது வரை படகு சவாரி இல்லாமல் உள்ளது.

பராமரிப்பின்றி பூங்காக்கள்

அதனால் நாமக்கல்லில் பொதுமக்களுக்கு என இருந்த பொழுதுபோக்கு அம்சம் இல்லாமல் போனது. மேலும் பூங்காக்கள் பராமரிப்பின்றி கிடக்கிறது. அதேபோல் குளத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருட்களும், கழிவுகளும் தேங்கி கிடக்கின்றன.

இதனிடையே பூங்காக்களில் காதல் ஜோடிகள் முகம்சுழிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். மேலும் நேரு பூங்காவில் வவ்வால்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. அதனால் பொதுமக்கள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் கமலாலய குளம் நிரம்பி அம்மா பூங்காவிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. அதோடு படகுகள் பழுதடைந்து தண்ணீரில் மிதக்கின்றன. எனவே பூங்காக்களை பராமரிப்பதோடு, கமலாலய குளத்தில் மீண்டும் படகு சவாரி மேற்கொள்ள மாவட்ட, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

படகு சவாரி

இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி:- நாமக்கல்லில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கமலாலய குளம் பராமரிப்பின்றி இருந்தது. கடந்த ஆட்சியில் அதை சீரமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. பின்னர் தற்போது தொடர் பராமரிப்பு இல்லாததால் நீண்ட காலமாக படகு சவாரி இல்லாமல் உள்ளது. மேலும் அதை சுற்றியுள்ள பூங்காக்கள் பராமரிப்பின்றி கிடக்கிறது. எனவே கமலாலய குளத்தை சுத்தம் செய்து படகு சவாரியை மீண்டும் தொடங்க வேண்டும்.

பாதுகாப்பு வழிமுறைகள்

நாமக்கல் நகர வளர்ச்சிக்குழு தலைவர் ஷேக் நவீத்:- கமலாலய குளத்தை சுற்றியுள்ள பூங்காக்கள் காதல் ஜோடிகளின் புகலிடமாக உள்ளன. இதனால் பொதுமக்கள் குழந்தைகளுடன் பூங்காக்களுக்கு வர தயங்குகின்றனர். மேலும் கமலாலய குளத்தில் உள்ள தண்ணீரை சுத்தம் செய்ய வேண்டும். அதோடு உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி படகு சவாரியை மீண்டும் தொடங்க வேண்டும். பின்னர் தான் பூங்காக்களுக்கும் பொதுமக்கள் வரத்து அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்